Saturday, September 19, 2026
More

    Latest Posts

    “பாலிவுட் கற்றுக்கொள்ள வேண்டும்!” – தென்னிந்திய சினிமாவை புகழ்ந்து தள்ளிய காஜல் அகர்வால்!

    சென்னை,

    தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழித் திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தற்போது தனது புதிய படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தென்னிந்திய சினிமா குறித்து அவர் கூறிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

    ‘பழனி’, ‘நான் மகான் அல்ல’, ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’, ‘விவேகம்’, ‘கோமாளி’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார்.

    ‘தி இந்தியா ஸ்டோரி’ ரிலீஸுக்கு தயாராகிறது
    தற்போது சாகர் பி. ஷிண்டே தயாரிப்பில், டி.கே. சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுடன் காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் வெளியிடும் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    எண்ணிக்கையை விட தரமான படங்களே முக்கியம்”
    சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய காஜல் அகர்வால், “நான் அதிக படங்களில் நடிப்பதை விட, தரமான படங்களிலேயே நடிக்க விரும்புகிறேன். எனக்குத் தேவையான வலுவான கதாபாத்திரங்கள் தென்னிந்திய சினிமாவில் அதிகம் கிடைத்ததால், நல்ல கதைகளுக்கே முன்னுரிமை கொடுத்தேன்” என்று தெரிவித்தார்.

    தென்னிந்திய சினிமாவை பாராட்டிய காஜல்
    மேலும் அவர், “பாலிவுட் சினிமா, தென்னிந்திய சினிமாவிடமிருந்து நேரம் தவறாமையை கற்றுக்கொள்ள வேண்டும். தென்னிந்திய திரையுலகில் நேரத்தையும் ஒழுக்கத்தையும் மிகவும் மதிக்கிறார்கள்” என்று பாராட்டினார். அத்துடன், தற்போது தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வலுவான கதாபாத்திரங்கள் எழுதப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் காஜல் அகர்வால் தெரிவித்தார்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.