Monday, November 16, 2026
More

    Latest Posts

    செக் மோசடி வழக்கு: நடிகர் விமலின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

    செக் மோசடி வழக்கில் போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய நடிகர் விமலின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    பைனான்சியரிடம் கடன் வாங்கிய விமல்
    ‘மன்னர் வகையறா’ படத்தின் தயாரிப்புக்காக நடிகர் விமல், பைனான்சியர் கோபி என்பவரிடம் இருந்து ரூ.4 கோடியே 50 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த தொகையை திருப்பிக்கொடுக்கும் வகையில் விமல் கொடுத்த காசோலை போதுமான பணம் இல்லை என திரும்பி வந்தது. இதையடுத்து விமலுக்கு எதிராக கோபி, சென்னை 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.

    கோர்ட்டு போட்ட உத்தரவு
    அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த ஜூலை 23-ந்தேதி அளித்த தீர்ப்பில், விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும். காசோலை தொகையை கோபிக்கு திருப்பிக்கொடுக்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாவட்ட 15-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விமல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ.10 லட்சத்தை 60 நாட் களில் விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தண்டனையை நிறுத்திவைத்து கடந்த ஆகஸ்டு 4-ந்தேதி உத்தரவிட்டார்.

    நிபந்தனையை ரத்து செய்த ஐகோர்ட்டு
    ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் விமல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய நடிகர் விமல்
    இந்நிலையில், தனக்கு எதிரான செக் மோசடி வழக்கில் குறிப்பிட்டுள்ள காசோலை விவரங்கள், உண்மை ஆவணங்களில் இல்லாதவை எனவும், மோசடியான ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, கோபிக்கு எதிராக நடிகர் விமல், சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    ஆனால், பிரதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு விட்டதால், மனு விசாரணைக்கு உகந்ததல்ல என திருப்பி அனுப்பி, சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, தனது மனுவை எண்ணிட்டு விசாரிக்கும்படி, சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி, நடிகர் விமல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது

    விமல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி, நடிகர் விமலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.