திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணா, நடிகை அஞ்சலியை மேடையில் பிடித்து தள்ளும் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாடகி சின்மயி கூறியுள்ள கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் விஸ்வக் சென் நடிப்பில், கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது. இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையேறிய நந்தமூரி பாலகிருஷ்ணா, படத்தின் கதாநாயகி அஞ்சலி மற்றும் நேஹா ஷெட்டியை தள்ளி நிற்குமாறு கூறினார்.
ஆனால், கதாநாயகிகள் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்ததால், திடீரென ஆவேசமடைந்த நந்தமூரி பாலகிருஷ்ணா, நடிகை அஞ்சலியை பிடித்து தள்ளினார். இதனால், சற்று நிலைதடுமாறிய அஞ்சலி, சுதாரித்து நின்றதோடு பாலகிருஷ்ணாவின் செயலை ஆமோதிக்கும் வகையில் சிரித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்களும் ஆராவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து, பாடகி சின்மயி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
அதிகாரத்தில் இருக்கும் மனிதர்கள் தவறாகவும், கடுமையாகவும் நடந்து கொள்கிறார்கள் என்ற ரீதியில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, “இதை மக்களிடம் பகிர்ந்து கொள்வதில் இருந்து நான் கவனிக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று, அவர் சிரிப்பதை பாருங்கள்” என்று அஞ்சலியை கண்டித்துள்ளார்.
அதே நேரத்தில், “தவறாக நடந்து கொள்ளும் ஆண்களை அதிகாரத்தில் அமர்த்த சமூகம் மறுப்பதாகவும், அவர்கள் பணம், சாதி மற்றும் அரசியல் பலத்தால் வந்தவர்கள். அவர்கள் பெறுவதற்கும் இழப்பதற்கும் எதுவுமே இல்லை என்ற நிலையில், பெண்களிடம் என்ன பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வந்து சொல்லாதீர்கள்” என்று அஞ்சலிக்கு ஆதரவாகவும் கருத்து கூறியுள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் பலரும் குழப்பம் அடைந்ததோடு, நந்தமூரி பாலகிருஷ்ணாவை விமர்சிக்காமல், அவரை ஆதரிக்கிறார் என்று சின்மயிக்கு எதிராக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
