கமல்ஹாசனின் உத்தம வில்லன் பட விவகாரத்தில் பொய்யான தகவல்களை யூடியுப் சேனல் ஒன்று பரப்புவதாக பிரபல இயக்குனர் லிங்குசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாதவன் நடித்த ரன், விக்ரமின் பீமா, கார்த்தி நடித்த பையா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லிங்குசாமி. சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை கொடுத்தது. இதேபோன்று விஷால் நடிப்பில் சூப்பர் ஹிட்டான சண்டை கோழி படத்தின் 2 ஆம் பாகத்தை கடைசியாக வெளியிட்டிருந்தார். இந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.
திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் லிங்கு சாமி, அதன் சார்பாக நடிகர் கமலை வைத்து உத்தமவில்லன் என்ற படத்தை 2015 ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்டிருந்தார். ரமேஷ் அரவிந்த் இயக்கிய இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் விவகாரம் தொடர்பாக பிரபல யூடியுப் சேனல் ஒன்று பொய்யான தகவல்களை பரப்புவதாக இயக்குனர் லிங்குசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
உலக திரை ரசிகர்களுக்கு அன்பான வணக்கம்,
தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9 கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான் பத்மஸ்ரீ திரு கமலஹாசன் அவர்களை வைத்து FIRST COPY (முதல் பிரதி) அடிப்படையில் தயாரித்த திரைப்படமான “உத்தம வில்லன்” எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும்.
இது திரு.கமலஹாசன் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். “உத்தம வில்லன்” திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக திரு.கமலஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு.சந்திரஹாசன் அவர்களும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.
அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான “வலை பேச்சு” என்கிற YOUTUBE சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக நேற்று (17-04-2024) தவறான தகவல்களை கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.
