ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில், ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் உஸ்தாத் பகத் சிங். ஸ்ரீலீலா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் நவீன் ஏர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தி்ன் டீசர் கடந்த 19 ம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் இந்த டீசர் மூலம் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது.
படத்தில் பவன் கல்யாண் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் முன்னால் ஒரு வில்லன் டீ கிளாஸை உயர்த்தி, இதுதான் உன் ரேஞ்ச் என்று அந்த கிளாஸை கீழே போட, கிளாஸ் உடைந்து சிதறுகிறது. அந்த வில்லனை புரட்டியெடுக்கும் பவன் கல்யாண், அந்த உடைந்த கண்ணாடித் துண்டை கையில் எடுத்து பன்ச் வசனம் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த டீசரில் இடம்பெறும் வசனம் மொத்தமும் இந்தக் காட்சியை மையப்படுத்தியே உள்ளது. இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, ஜூன் 4 ம் தேதி நடக்கவுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்தத் தேர்தலில், அரசியல் கட்சித் தலைவரான பவன் கல்யாண் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கவுள்ளார். இந்நிலையில், அவரது பட டீசரில், அவரது கட்சிச் சின்னத்தை பிரதானப்படுத்தி காட்சி வைத்திருப்பது, தேர்தல் விதிமீறில் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஆந்திரா தலைமைத் தேர்தல் அதிகாரி, “நான் டீசரை பார்க்கவில்லை. எனவே, நான் அதில் கருத்து கூற முடியாது. ஆனால் விளம்பரத்திற்காக டீ கிளாஸை உயர்த்தி காட்டினால் அது அரசியல் விளம்பரமாகவே கருதப்படும். இப்படி அரசியல் விளம்பரங்கள் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. இருப்பினும், அத்தகைய விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம். அரசியல் விளம்பரம் என்றால் அந்த படக்குழுவினருக்கு நோட்டீஸ் கொடுப்போம். அவர்கள் முன்சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.
More News👇
