கன்னட இயக்குநர் பவன் குமாரின் லூசியா திரைப்படத்தை 2015 ல் தமிழில் ரீமேக் செய்தனர். பெயர் எனக்குள் ஒருவன், நடித்தது சித்தார்த், இயக்கியவர் பிரசாத் ராமர். நீண்ட இடைவெளிக்குப் பின் பிரசாத் ராமர் இயக்கியிருக்கும் படம், நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.
இப்படத்தில் நாயகனாக செந்தூர் பாண்டியனும், நாயகியாக ப்ரீத்தி கரன் என்பவரும் நடித்துள்ளனர். பூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார் தயாரித்து, இசையமைத்து, பாடல்கள் எழுதியுள்ளார். இவர் இயக்குநர் பிரசாத் ராமரின் நண்பர். அவர் சொன்ன கதை பிடித்துப்போய் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு சென்சார் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
நேர்மறையான, குழந்தைகளுக்கு அறிவுரைச் சொல்லக் கூடிய, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற பெயர் கொண்ட படத்துக்கா ‘ஏ’ சான்றிதழ் என்பதே அனைவரின் வியப்பாக உள்ளது. இது குறித்தும், படம் குறித்தும் இயக்குநரிடம் பேசினோம்.
“இந்தச் சமூகத்தில் இளைஞர்கள் மீதான பார்வை எப்படி இருக்கிறது? சமூகத்தை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? என்பனவற்றைச் சொல்லும் வகையில் இந்தப் படத்தின் கதையை அமைத்திருக்கிறேhம். இரண்டு இளைஞர்கள் மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள். பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். அந்த இளைஞர்களின் நோக்கம் ஒன்றாக இருக்க, அந்தப் பெண்ணின் எதிர்பார்ப்பு வேறாக இருக்கிறது.
“இந்த இரு தரப்பு எண்ணங்கள் மற்றும் புரிதல் எப்படி இருக்கிறது? அவர்கள் மீதான சமூகத்தின் புரிதல் எப்படி இருக்கிறது? என்பதைப் பற்றித் தான் படம் பேசுகிறது. இந்தப் படத்தை வழக்கமான பாணியில் எடுக்காமல் நிஜ வாழ்க்கைப் பயணமாக இருக்க வேண்டும் என்று நினைத்து எடுத்திருக்கிறோம். அதற்காகத்தான் ஈஸ்தட்டிக்ஸ் கலர் போன்ற விசயங்களைத் தவிர்த்திருக்கிறோம். அதேபோல், மதுரை உள்ளிட்ட பகுதிகளை காட்டும் போது வழக்கமாகக் காட்டப்படும் இடங்களைக் காட்டாமல், இதுவரை திரைப்படங்களில் பார்க்காத மதுரைப் பகுதிகளில் காட்சிகளைப் படமாக்கினோம். அதற்குக் காரணம், அப்பகுதிகளில் இருப்பவர்கள் படத்துடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்வதற்காகத்தான். தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் இப்படித்தான் கையாண்டிருக்கிறோம்.
“படத்துக்கு, தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. கதைக்காக படத்தில் முத்தக்காட்சிகள் வைத்திருக்கிறோம். நாங்கள் தொட்டிருக்கும் சம்பவங்களுக்காக ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதே சமயம், அக்காட்சிகளை எடுக்கும் போது சம்மந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு விரிவாகப் புரிய வைத்துத் தான் எடுத்தோம். அந்தக் காட்சிகள் எந்தவிதத்திலும் நெருடலாக இருக்காது. படத்தைப் பார்க்கும் போது அதை நீங்களும் உணர்வீர்கள்.
“இந்தப் படத்தில் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. இது சரி, அது தவறு என்று அறிவுரையும் வழங்கவில்லை. இதுதான் தீர்வென்றும் சொல்லவில்லை. இப்படிப்பட்ட விசயங்களை இளைஞர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி மட்டுமே பேசியிருக்கிறோம். அவற்றை திரையில் பார்க்கும் போது பார்வையாளர்களுக்குப் பல கேள்விகள் எழும். அவை ஆரோக்கியமானதாக இருக்கும்” என்றார். நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே மார்ச் 8 திரைக்கு வருகிறது.
More News👇
