Tuesday, November 17, 2026
More

    Latest Posts

    பிசுபிசுத்த முருகதாஸ், சிவகார்த்திகேயன் படத்துக்கு எதிரான போராட்டம்

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் பிப்ரவரி 14 ம் தேதி நடந்தது. 15 ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்கினர். இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, நாயகியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார்.

    இந்தப் படத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த அவுட்டோர் யூனிட்டை ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர்கள்தான் சென்னையில் நடந்த படப்பிடிப்புக்கான அனைத்து வேலைகளையும் செய்து வந்தனர். இதற்கு இங்குள்ள அவுட்டோர் யூனிட் சங்கம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. அவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்புக்கு வெளிமாநிலங்களிலிருந்து உபகரணங்களைக் கொண்டுவரக்கூடாது என்கிற விதிமுறை இருக்கிறது. அதை மீறி ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் செயல்பட்டிருக்கிறார்கள். உடனே இதை நிறுத்தவேண்டும், இல்லையெனில் எந்தப்படத்துக்கும் நாங்கள் பணிபுரியமாட்டோம் என்று அறிவித்தனர்.

    இதனால், பிப்ரவரி 16 ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்தப் படப்பிடிப்பும் ரத்து செய்யப்படவில்லை. சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17 தனது பிறந்தநாளை முருகதாஸ் படத்தின் படப்பிடிப்புதளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அதாவது, முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்படவில்லை.

    இது குறித்து விசாரித்த போது பல தகவல்கள் தெரிய வந்தன. முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிக்கிறது. இது தெலுங்கு தயாரிப்பு நிறுவனம். இதன் நிறுவனர் திருப்பதி பிரசாத் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர் அங்குள்ள அவுட்டோர் யூனிட்டுடன் ஏற்கனவே ஒப்பந்ம் போட்டுள்ளார். அதன்படி ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு அவுட்டோர் யூனிட் இங்கு பணிபுரிந்து வருகிறது. ஏற்கனவே படப்பிடிப்புக்கான அனைத்தும் திட்டமிட்டுள்ளதால், அதனை ரத்து செய்வது பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும், அதனால், பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு மேல் இங்குள்ள அவுட்டோர் யூனிட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தரப்பில் வாக்குறுதி தரப்பட்டதால், போராட்டத்தை இங்குள்ள அவுட்டோர் யூனிட் கைவிட்டுள்ளது.

    நாளை மறுநாளிலிருந்து, படப்பிடிப்புக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஆள்களை இங்கிருந்தே எடுத்துக் கொள்ளவிருக்கிறார்கள். இதேபோல் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தின் புரமோ ஷுட்டிங்கிற்கும் வெளிமாநில அவுட்டோர் யூனிட்டை பயன்படுத்தியது பிரச்சனையானது. இரண்டு நாள் படப்பிடிப்பு என்று சொல்லி, இங்குள்ளவர்களை சமாதானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    வெளிமாநில அவுட்டோர் யூனிட்டை, தமிழ்ப் படத்திற்கு, அதுவும் தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடுமையான நடவடிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைப்பது அவசியம்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.