அயலான் திரைப்படம் குழந்தைகளுக்குள் எந்த தப்பான விஷயத்தையும் புகுத்தாது என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
இன்று நேற்று நாளை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் அயலான். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏலியன் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
அயலான் திரைப்படத்தின் பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டே தொடங்கியது. 8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் வேலைகள் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி பிரச்சினையில் சிக்கியது. இதன் காரணமாக படத்தின் பணிகள் முடிவடையாமல் இருந்தன. தற்போது நிதி சிக்கல் சரி செய்யப்பட்டு படத்தை திரைக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தின் டீசரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த டீசர் வெளியிட்டுருக்கான விழா சென்னையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார், இஷா கோபிகர், பாடலாசிரியர்கள், கலை இயக்குனர் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய இஷா கோபிகர் உள்ளிட்ட பலரும் அயலான் தாமதமானாலும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் என தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ரவிக்குமார், படத்தின் தாமதம் குறித்தும், படத்தின் வேலை செய்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். மேலும் படத்திற்கு பல பிரச்சனைகள் வந்தாலும், அதை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய தோளில் சுமந்தார் என நெகிழ்ச்சியுடன் கூறினர்.
இறுதியாக பேசிய சிவகார்த்திகேயன் பல சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக ரவிக்குமாருடன் பணியாற்றியது குறித்து பேசினார். அதுவும் ரவிக்குமார் கொங்கு தமிழில் பேசுவதை மிமிக்கிரி செய்தார்.
மேடையில் சிவகார்த்திகேயன் பேசிக் கொண்டிருக்கையில், திரையில் படத்தின் டீசர் தவறுதலாக ஒளிபரப்பானது. அதற்கு தன்னுடைய ஸ்டைலில் படத்திற்குதான் தடை வருகிறது என்றால், பேசும்போதும் தடை வருகிறது என நகைச்சுவையாக கூறினார்.
டீசர் வெளியீட்டு விழாவில் அயலான் குறித்து தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் சுவாரசியமாக பேசிய சிவகார்த்திகேயன், இந்த திரைப்படத்தில் பல விஷயங்கள் உள்ளன. இது குழந்தைகளுக்கான திரைப்படம், உங்களுக்குள் இருக்கும் குழந்தைக்கான திரைப்படம் என கூறினார். மேலும் எந்த விதத்திலும் இது குழந்தைகளுக்கு தவறான விஷயங்களை புகுத்தாது என தெரிவித்தார். விஜயின் லியோ திரைப்படத்தின் டீசரில் ஆபாச வசனம் இடம்பெற்றது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் தன்னுடைய படம் குழந்தைகளுக்கு எந்த தவறான விஷயத்தையும் புகுத்தாது என சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.
அயலான் திரைப்படம் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் இதே இயக்குனருடன் மீண்டும் பணியாற்ற உள்ளதாக சிவகார்த்திகேயன் மேடையில் அறிவித்துள்ளார். மேலும் அயலான் பொங்கலுக்கு வருவான், அனைவரையும் கவருவான், வெல்வான் என அவர் கூறியுள்ளார்.
