ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் கடந்த செப்.7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஷாருக்கானிற்கு முன்னதாக வெளியான ‘பதான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இந்தப்படத்தையும் அவரது ரசிகர்கள் அதே வரிசையில் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
பரபரப்பாக இயங்கும் ஒரு நகரத்தில் மெட்ரோ ரயிலை ஷாருக் சில பெண்களுடன் ஹைஜேக் செய்கிறார். அதில் இருக்கும் பயணிகளை விடுவிக்க 40 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். அந்த பணம் எதற்கு? யாருக்காக அதை செய்கிறார்? அந்த கடத்தலில் ஈடுபடும் பெண்கள் யார்? அவர்களுக்கான பின்னணி என்ன? ஷாருக்கானின் கடத்தல் எங்கு சென்று முடிகிறது என்பதே ஜவான்.
இந்நிலையில், ஜவான் படம் வெளிவந்து கடந்த 23-ம் தேதி 15 நாட்கள் முடிவடைந்த நிலையில் படம் ரூ. 953 கோடி வசூலை கடந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் அட்லீ வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நேற்றைய வசூலையும் சேர்த்து, ஜவான் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி படம் 979 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
