டெல்லியில் நாளை புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் திறந்து வைக்கின்றனர். இந்நிலையில், இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெறும் என மக்களவை செயலகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி விழாவின் முதல் பகுதியாக, காலை 7 மணி முதல் 9 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகே மத சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்ட 40 மத குருக்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில் இளையராஜா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”பிரதமர் நரேந்திர மோடி நாளை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைக்கிறார். குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த குறுகிய காலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த கட்டிடத்தை கட்டிமுடிக்க துணைபுரிந்த பிரதமர் மோடி, மத்திய அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலகம் புதிய இந்தியாவைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், இடைநிலைக் கொள்கைகள் மற்றும் முடிவெடுப்பதற்கான இடமாக இந்த புதிய கட்டிடம் மாற நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பிற்குரிய செங்கோலை (பழங்கால தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பெருமை) கொண்ட அரச குடும்பத்தினர் அவர்களின் வெற்றிகரமாக ஆட்சி செய்தவர்கள் செங்கோலை நீதி, ஒழுங்கு, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக போற்றினர். இத்தகைய செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
