டிசம்பர் 28 ஆம் தேதி மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கர் சார்பில், அனைத்து சினிமா சங்கங்களும் பங்குபெறும் இரங்கல் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் பொறுப்புக்கு வந்த போது, சங்கம் கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது. கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து, வெளிநாடுகளில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தி கடனை அடைத்தார் விஜயகாந்த். ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து நடந்த உண்ணாவிதப் போராட்டத்தை விஜயகாந்த் முன்னின்று நடத்தினார். அவரது தலைமையில் காவிரி விவகாரத்தில் நடிகர்கள் நெய்வேலியில் போராட்டம் நடத்தினர்.
நடிகர் சங்கத்துக்கு பல நன்மைகள் செய்த விஜயகாந்துக்கு உரியமுறையில் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வரும் 19 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் இரங்கல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர்கள் மட்டுமின்றி சினிமாவின் அனைத்துச் சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்புவிடுத்து, இந்த இரங்கல் கூட்டத்தை நடத்த உள்ளனர். திரைத்துறையினர் விஜயகாந்த் குறித்த தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. விரைவில் இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக அறிவிக்க உள்ளது.
