Saturday, March 14, 2026
More

    Latest Posts

    வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!

    கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் வழங்கப்படும் மிகச் சிறந்த ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது என்று இலக்கியத் துறையினர் கொண்டாடி வருகிறார்கள். பலதுறை தலைவர்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 1972ஆம் ஆண்டு, வைகறை மேகங்கள் என்ற முதல் கவிதை நூலை வெளியிட்டு, தன்னுடைய இலக்கிய வாழ்வைத் தொடங்கிய கவிஞர் வைரமுத்து, எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளையும், நாவல்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

    அது மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் இதுவரை 7,500க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை இயற்றியுள்ளார்.

    சிறந்த திரையிசைப் பாடலுக்கான தேசிய விருதினை வைரமுத்து இதுவரை ஏழு முறை பெற்றிருக்கிறார். அதிகபட்சமாக 7 தேசிய விருதுகளை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

    இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் வைரமுத்துவுக்கு, நாட்டின் இலக்கியத் துறையில், மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். தற்போது தமிழகத்திலிருந்து மூன்றாவது கவிஞராக ஞானபீட விருதினை வைரமுத்து பெறுகிறார்.

    கவிஞர் வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற இலக்கியப் படைப்புக்காக சாகித்திய அகாதெமி விருதினையும் மிக உயர்ந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான சாதனா சம்மான் என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

    மேலும், இலக்கியத்தில் கலைஞர்களின் பங்களிப்புக்காக மத்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் கவிஞர் வைரமுத்து பெற்றிருக்கிறார்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.