ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் முதல் நாளில் 90 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. அதேபோல் இந்தப் படம் முதல் வார முடிவில் 402 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதுவரை எந்த ஒரு திரைப்படமும் ஒரே வாரத்தில் ரூ.400 கோடி வசூலை தாண்டியதில்லை. அந்த வகையில் முதன்முறையாக ஒரு வாரத்தில் ரூ.402கோடி வசூல் செய்து ஜெயிலர் சாதனை படைத்தது. இந்த நிலையில் தற்போது 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கி இருக்கிறது.
மேலும் ஜெயிலர் வெளியாகி 11 நாட்களில் உலகம் முழுவதும் 492 கோடியே 50 லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ளது என திரைத்துறையினர் கூறுகின்றனர். அதில் தமிழகத்தில் மட்டும் ரூ. 142 கோடியும், கேரளாவில் ரூ.46 கோடியும், கர்நாடகாவில் ரூ.60 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சேர்த்து ரூ.69 கோடியும், வட இந்தியாவில் ரூ.9.5கோடியும் மற்றும் வெளிநாடுகளில் 166 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் இன்றைய வசூலைச் சேர்த்து ரூ.500 கோடியைக் கடக்கும் என திரைத்துறையில் கூறுகின்றனர். இதற்கு முன்பு ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் வெளியான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 750 கோடி ரூபாய் வசூல் செய்தது. தற்போது அந்த வசூல் சாதனையை நோக்கி ஜெயிலர் பயணிக்கிறது என கூறுகின்றனர். இன்று 500 கோடியை கடக்கும் ஜெயிலர் 2.0 வசூல் சாதனையை நெருங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
